June 28, 2018
தண்டோரா குழு
கடனை திருப்பிச் செலுத்த தகுதியில்லாத பெற்றோருக்கு கல்விக் கடனை கொடுக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு கல்விக் கடன் அளிக்க வங்கி மறுப்பதாக கூறி தீபிகா என்ற நர்சிங் மாணவி வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, தீபிகாவின் தந்தை ஏற்கனவே மற்றொரு பிள்ளைக்காக கல்விக்கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும்,கடனை திருப்பிச் செலுத்த இயலாத பெற்றோருக்கு கல்விக் கடனை மறுக்கலாம்.அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிர்பந்தங்களால் கடன் வழங்குவதில் மக்கள் பணம் வீணாகிறது.மாணவர்களுக்கு வழங்கப்படும் கடனை பெற்றோரால் திரும்ப செலுத்த இயலுமா என்பதை ஆராய வங்கிகளுக்கு உரிமை உண்டு.கடன் என்பது சிறியதோ,பெரியதோ அதனை வாங்குபவரிடம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் தகுதியை ஆராய்தல் சரியான முடிவாகும்.
கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுபவர்கள் பின்னால் அலைவதை விட முன்கூட்டியே யாருக்கு வழங்கலாம் என முடிவு செய்து வழங்குதல் சரியான செயலாகும்.அழுத்தங்களால் வங்கிகள் கடன் கொடுக்கும் போது பொதுமக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவதோடு,வாங்குபவர் நாட்டை விட்டு சென்று விடுவதும் நடக்கிறது என நீதிபதி கூறியுள்ளார்.இதையடுத்து,வங்கி விதிகளின் படி நர்சிங் மாணவர்களுக்கு கடன் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.