June 28, 2018
தண்டோரா குழு
உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது இதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் பணிகளை தொடங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.இதற்கு வார்டு வரையறை பணிகள் நடந்து வருவதாகவும்,விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறியது.
இதனையடுத்து,உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காரணத்தால்,உள்ளாட்சித்துறை தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று 4 ஆம் முறையாக பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவிற்கு ஆரம்ப நிலையிலேயே திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும்,இந்த நீட்டிப்பு வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அல்லது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.