June 27, 2018
தண்டோரா குழு
திரைத்துறைக்கு சென்று இருந்தால் ஜெயலலிதாவோடு நடிப்பதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என சட்டப்பேரவையில் துரைமுருகன் பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை விவாதத்தின் போது கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கோரிக்கை வைத்து பல கிராமிய பாடல்களையும் அவர் பாடிக் காட்டினார்.
அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் தனபால் அழகாக பாடும் நீங்கள் நாடகங்களில் நடித்து உண்டா என்று துரைமுருகனை பார்த்து கேள்வி கேட்டார்.அதற்கு துரைமுருகன் நான் சிறுவயதில் பல நாடகங்களில் நடித்துள்ளதேன்.ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டது போல் உலகமே நாடக மேடை இங்கு அனைவரும் நடித்து கொண்டு இருக்கிறோம்.சபாநாயகர் ஆகிய நீங்களும் நடித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள் என்றார்.இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
அப்போது,குறுக்கிட்டு பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2001 ஆம் ஆண்டு அவையில் பேசும் போது துரைமுருகன் நவரசங்கள் வெளிப்படும் விதமாக பேசுவதாக அவர் பாராட்டியதை சுட்டுக்காட்டினார்.
இதற்கு துரைமுருகன் சினிமா துறைக்கு போயிருந்தால் ஜெயலலிதாவோடு நடித்திருக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றார்.இதை கேட்ட திமுக அதிமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி சிரித்துள்ளனர்.