June 26, 2018
தமிழகத்தில் இளம் தலைமுறையினரை தொழில் முனைவோர்களாக மாற்றும் ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதத்தில் துவங்கும் என தமிழக சிறு குறுந்தொழில் துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் 2018 ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் எனும் வன்பொருள் வடிவமைப்பு போட்டி கடந்த 18ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஃபோர்ஜ் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் கேரளா,தெலுங்கானா,குஜராத்,சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 9 தொழில்நுட்ப கல்லூரிகள் பங்கேற்றன.
இறக்குமதிக்கான மாற்றுப்பொருள் உருவாக்கம் மூலமாக மேக் இன் இந்தியா ஸ்மார்ட் இந்தியா ஸ்கில் ஸ்டார்ட் அப் இந்தியா ஆகிய இலக்குகளை எட்டுவதற்கான முன்னோடியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றிருந்தன.குறிப்பாக பெரு நகரங்களில் அதிக அளவு புகையினால் ஏற்படும் காற்று மாசு அளவை கண்டறிந்து அறிவிக்கக் கூடிய கருவி,தேவையற்ற நேரங்களில் இயங்கும் மின்சார உபகரணங்களை அனைத்து மின்சாரத்தை சேமிக்கும் கருவி,கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்களுக்கான காது கேட்கும் கருவி போன்றவை சிறப்பிடம் பெற்றிருந்தன.முன்னதாக போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்ற தமிழக சிறு குறு தொழில் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
“மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகள் பாராட்டத்தக்கது.தமிழக அரசும் மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.குறிப்பாக தமிழக அரசு அறிவித்துள்ள ” இனோவேசன் வவுச்சர் ஸ்கீம்” எனப்படும் திட்டம் மூலம் மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகளை முழு வடிவமாக்க 2 முதல் 5 லட்சம் வரை நிதி உதவி அளித்து வருவதாகவும் இது போன்று ஆண்டிற்கு 400 புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவ முடிவு செய்துள்ளதாகவும்,அதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் இவர்கள் தொழில் துவங்குவதை ஊக்குவிப்பதற்கான ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம் அடுத்த மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.இதேபோல் தமிழகத்திலுள்ள மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற சென்னை ஐஐடி,அண்ணா பலகலைக்கழகம் உட்பட 300 கல்லூரிகளில் தொழில் முனைவோர் மையம் துவங்கப்பட்டுள்ளது”.இவ்வாறு கூறினார்.