June 25, 2018
தண்டோரா குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கியது.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கருப்பு கண்ணாடியுடன் சிகரெட் புகைக்கும் காட்சியில் விஜய் தோன்றினார்.போஸ்டர் வெளியிட்ட அன்றே பாமக-வின் இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.இதனைத்தொடர்ந்து,பாமக தலைவர் ராமதாஸ் படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் சென்னை வேப்பேரி காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் நடிகர் விஜய் மீது திருவேற்காடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் புகார் அளித்தார்.அந்த புகார் மனுவில்,விஜய் சிகரெட் பிடிப்பது போன்று வெளியாகியிருக்கும் சர்கார் பட விளம்பரத்தால் அவரை பின்பற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.அதனால் விஜய் மற்றும் சர்கார் படத்தின் இயக்குநரை நேரில் அழைத்து விசாரித்து படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.