June 25, 2018
தண்டோரா குழு
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய யார் காரணம் என்பது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும்,பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் டுவிட்டரில் கருத்து மோதல் நடைபெற்றுள்ளது.
நீண்டநாள் எதிர்பார்ப்பிற்கு பின் தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில்,தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசின் சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வராதது ஏன்?நடுவண் அரசில் தொடர்ந்து இரண்டுமுறை ரயில்வே இணைஅமைச்சர்களை பெற்ற பாமக அப்போது தர்மபுரி மொரப்பூர் ரயில்திட்டத்தை நிறைவேற்றாமல் தற்போது ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனுஅளிப்பது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
அவரது இந்த கேள்விக்கு டுவிட்டரிலேயே பதிலளித்த அன்புமணி,மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான்.மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கி 2008ல் அடிக்கல் நாட்டியதும் நானே.ஆனால்,பின் வந்த அதிமுக அரசு அதை செயல்படுத்தவில்லை.இதுகூட தெரியாதவர் தேசத்தை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவி என பதிவிட்டு இருந்தார்.
டாக்டர் அன்புமணியின் டுவிட்டர் பதிவுகள்:
எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமல்ல. தமிழிசை கூறும் தருமபுரி- மொரப்பூர் இணைப்பு திட்டத்துக்கும் பா.ம.க. அமைச்சர்கள் காலத்திலேயே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.நிதி ஒதுக்கி செயல்படுத்தாததால் அது குறித்து வலியுறுத்த ரெயில்வே அமைச்சர்களை கடந்த 4 ஆண்டுகளில் 16 முறை சந்தித்துள்ளேன்.
அண்மையில் நடந்த சந்திப்பின் போதும் இந்த திட்டங்களை வலியுறுத்தினேன். இது கூட தெரியாதவர்தான் தேசிய கட்சியின் மாநில தலைவர். அய்யோ… அய்யோ…
தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் மற்றும் பொது அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு தகவல்: 2002-ல் பிரதமராக இருந்த வாஜ்பாயே அவரது தொகுதியான லக்னோ ரெயில் நிலையத்தை சீரமைக்கும் பணியை பா.ம.க. அமைச்சர் ஏ.கே. மூர்த்தியிடம் தான் ஒப்படைத்தார்.பணிகளை வியந்து பாராட்டினார்.
வாஜ்பாய் ஆட்சியில் பா.ம.க.வின் ஏ.கே. மூர்த்தி ரயில்வே அமைச்சராக இருந்தார்.பா.ம.கவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு வாஜ்பாய் மீது சேறும்,சகதியும் வீசிக்கொண்டிருக்கிறார் அரசியல் வரலாறு தெரியாத தமிழிசை சவுந்தரராஜன்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் பதிலடி பதிவுகள்:-
பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போல் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த உங்களால் ஏன் தமிழகத்தில் முழுமையான எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வர முடியவில்லை என்று கேட்டால் தோப்பூரில் அடிக்கல் நாட்டியதையும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு எய்மஸ் அளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுத்ததாகவும் கூறுகிறார்.
நிதி ஒதுக்கியதாகச் சொல்கிறீர்கள்.அதன்பின்பும் பாராளுமன்ற உறுப்பினராகத்தொடரும் நீங்கள் எத்தனைமுறை மதுரை எய்ம்ஸ் பற்றி பேசினீர்கள் தர்மபுரிக்கும் எய்ம்ஸ் வேண்டும் என்று தானே குழப்பினீர்கள்?அரசியல் அனுபவம் பற்றி பேசுகிறீர்கள்.நான் தந்தை நிழலில் பதவி பெறவில்லை. சாதியை வைத்து சாதிக்கவில்லை.
சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் நாடெங்கும் பல தரமற்ற புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்க முறையற்ற அனுமதிகள் வழங்கியதில் நீங்கள் காட்டிய வேகம் விவேகம் ஏன் தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வரகாட்டவில்லை?மருத்துவ கல்லூரி அனுமதி ஊழல் வழக்குக்காக இன்னமும் நீதிமன்றம் அலைவதும் மக்களுக்கு தெரியும்.
என் அரசியல் அனுபவம் 20 ஆண்டு கால முழுநேர அரசியல் பணி.என் உழைப்புக்கு கட்சி வழங்கிய அங்கீகாரம் தான் நான் படிப் படியாகப் பெற்ற பதவிகள்.வாரிசு என்று சொல்லி பதவியை வாரிச்சுருட்டவில்லை.பதில் சொல்வதிலும் நாகரீகம் வேண்டும் என்பது தங்களுக்கும் உங்களுக்கு ஆதரவாக பதிவிடுவோருக்கும் தேவை.
அய்யா என்று தான் மரியாதையுடன் அழைக்க என அய்யா சொல்லி வளர்ந்த எனக்கு தங்கள் பதிவில் உள்ள அய்யோ அய்யோ என நாகரீகமற்ற சொற்றொடர்களை கண்டதும் எங்களுக்கு இல்லாத பொது அறிவு தங்களுக்கு இருப்பதாக தாங்களே கூறிக்கொள்வது என்னை புல்லரிக்கவைக்கிறது நன்றி.
இதற்கிடையில்,இரு தலைவர்கள் ட்விட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டதால் சமூக வலைதளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து தொண்டர்களும் டுவிட்டர் பக்கத்தில் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.