June 23, 2018
தண்டோரா குழு
எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வந்தாலும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு பாராட்டை தெரிவிக்க மறுக்கின்றனர் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
மத்திய அரசு எதற்கெல்லாம் விமர்சிக்கப்பட்டதோ அதெல்லாம் சரி செய்யப்பட்டது. பன்னெடுங்காலமாக புறக்கணிப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வந்தாலும் சில கட்சிகள் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்க மறுக்கின்றனர். காவிரி விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றத்திற்கு போவதாகவும் சொல்லும் கர்நாடக முதல்வர் குமாரசாமி கண்டிக்கப்பட வேண்டியவர். காவிரி விவகாரத்தில் கமலஹாசன் உட்பட எந்த கட்சியும் குமாராசாமிக்கு எதிர்ப்பை காட்டவில்லை.மத்திய அரசு தமிழக வளர்ச்சிக்காக கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இருக்கின்றார் கர்நாடக முதல்வர் குமாராசாமி தமிழகத்திற்கு எதிராக பேசும் நிலையில் அவருக்கு எதிராக தமிழக கட்சிகள் போராடவில்லை.
இதேபோல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில் எதிர் கட்சிகள் காட்டிய கருப்பு கொடி,கருப்பு பலூன் போன்றவற்றை திரும்ப பெற வேண்டும். ஸ்டாலின் பெங்களூருக்கு நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.
குட்கா விவகாரத்தில் எந்த கட்சி தவறு செய்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குட்கா விவகாரம் 10 -15 வருடங்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்துள்ளது என தகவல்கள் வந்துள்ளது.திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே விசாரிக்கப்பட வேண்டியவர்கள் தான் எனவும் சுட்டிக்காட்டினார்.குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை முழுமையாக நடத்தப்பட வேண்டும் எதற்கெடுத்தாலும் ஆட்சியாளர்களை ராஜினாமா செய்ய சொல்வது என்பது சரியாக இருக்காது.
குட்கா விவகாரத்தில் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தவறான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியால் முன் வைக்கப்படுகின்றது. பா.ஜ.க மீது எந்த புகாரும் இல்லாததால் காங்கிரஸ் கட்சி அமித்ஷா மீது தவறான தகவல்களை பரப்புகின்றது இவ்வாறு அவர் கூறினார்.