June 20, 2018
தண்டோரா குழு
ஜம்மு-காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.இதில்,மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி முதல்வராக ஆட்சி செய்து வந்தார்.
இந்நிலையில்,அண்மைக்காலமாக காஷ்மீரில் நிலவும் சூழல் காரணமாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.மேலும்,பயங்கரவாதம்,வன்முறை,பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் கூட்டணியை பாதித்தன.இதனையடுத்து மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி முறிவு தொடர்பான அறிவிப்பை பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் நேற்று அறிவித்தார்.
இதனையடுத்து முதல்வர் பதவியை மெஹபூபா முப்தி ராஜினாமா செய்தார்.தொடர்ந்து கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இதனையடுத்து அங்கு உடனடியாக கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது.மேலும்,ஜம்மு-காஷ்மீரில் எட்டாவது முறையாக கவர்னர் ஆட்சி அமலாவது குறிப்பிடத்தக்கது.