June 18, 2018
தண்டோரா குழு
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா,நவோதயா,அரசு உதவி பெறும் பள்ளிகள்,அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள்,சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப,உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.இதுவரை 20 மொழிகளில் தேர்வு எழுதும் வசதி இருந்து வந்தது.
இதற்கிடையில்,தேர்விற்கான மொழித் தேர்வில் இருந்து தமிழ்,தெலுங்கு,கன்னடம்,குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாக தகவல் வெளியானது.இந்தி, ஆங்கிலம்,சமஸ்கிருதம் மொழிகளில் தான் எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்திருந்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மறுத்தார்.தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் நடத்த சிபிஎஸ்இக்கு பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் மொழி நீக்கப்பட்டதை அடுத்து பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.4 மாதங்களில் தேர்வை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மூன்று மொழிகளில் எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.