June 18, 2018
தண்டோரா குழு
கோவையில் சிறு வியாபாரிகளுக்கு கடை கட்டித்தர உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்தனர்.
1994 ஆம் ஆண்டு கோவை நகரம் முழுவதும் 647 சிறு வியாபாரிகள் நடைபாதையில் கடை நடத்தி வந்துள்ளனர்.அப்போது காவல் துறை கெடுபிடி அதிகரித்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதனையடுத்து உயர்நீதிமன்ற ஆணையின்படி அனைத்து சிறு வியாபாரிகளும் மாநகராட்சி கடைகளை கட்டித்தர ஆணை பிறப்பித்தது.
அப்போதைய எம்.எல்.ஏ நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாயும்,சிறுவியாபாரிகள் தலைக்கு 2250 ரூபாயை மாநகராட்சிக்கு கொடுத்தும் கடைகள் கட்டித்தராமல் இழுத்தடித்து வருவதாக குற்றம் சாட்டினர்.மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் இழுத்தடித்து,நஞ்சப்பா சாலையில் 125 சிறு வியாபாரிகளுக்கு கடை கட்டி கொடுத்தும்,அதை மேம்பால பணிக்காக திரும்ப எடுத்துக்கொண்டுள்ளனர்.இதனால் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நீதிமன்ற ஆணையை மதிக்காமல் சிறு வியாபாரிகளை ஏமாற்றி வருவதை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப்போவதாக தெரிவித்தனர்.