June 18, 2018
தண்டோரா குழு
சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரிய ஒப்புதல் வழங்க வேண்டும்,தொழிலாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்கிட வேண்டும்,ஒப்பந்த பணியாளர்களுக்கு அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ 380 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக சென்னையில் உள்ள மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில்,
“கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரியப் பிரிவு அலுவலகங்களிலும்,2 ஆயிரம் பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி செய்து வருகிறோம்.தமிழகம் முழுவதும் புயல்,வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் அதனை சரி செய்வதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்,ஆனால் எங்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய எந்த அதிகாரியும் முன்வருவது இல்லை.
மேலும்,கடந்த 2008-ம் ஆண்டு முதல் எந்த ஒரு பணியும் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு செய்வதில்லை என அதிகாரிகள் அரசுக்கு தெரிவித்துள்ளனர்” என்றார்.
இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டங்களை தீவிரப்படுத்தவுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.