June 15, 2018
பி.எம். முஹம்மது ஆஷிக்
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில்,உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகள் வழங்கினர்.
சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தரும் உத்தரவிட்டனர்.இதனால் வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இந்த தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதில்,நீதிமன்றத்தில் இருவேறு தீர்ப்புகள்.Court ல Split Verdict ஆமே !அப்போ 18 ஐ பிரித்து ஆளுக்கு ஒன்பது எம்.எல்.ஏக்களா என்று குறிப்பிட்டுள்ளார்.இதுமட்டுமின்றி,அந்த பதிவில் இரு திருநங்கைகளின் படத்தை பயன்படுத்திருந்தார்.இது திருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக அவருக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சமூக எழுத்தாளரும் திருநங்கையுமான கல்கி சுப்ரமணியமும் நடிகை கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,
“நிறைய திருநங்கைகளும்,திருநம்பிகளும் மன ரீதியாகவும் மன அழுதத்திலும் இருக்கிறோம். பாலியல் ரீதியான வன்முறைகள்,குடும்ப புறக்கணிப்புகள்,சமூகம் எங்களை இன்னும் சரியாக புரிந்து கொள்ளாமல் கேலி செய்தல்,கிண்டல் செய்தல் என இன்னும் பல விஷயங்ககள் இருக்கிறது. அதற்காக நாங்கள் நிறைய போராடிக்கொண்டிருக்கிறோம்.கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது இந்த சமூகத்தில் நாங்கள் முன்னேறியுள்ளோம்.
பிரபல நடிகையாக இருக்கும் நடிகை கஸ்தூரி சமூகத்தில் மேல்தட்டு வர்க்கத்தில் இருந்து அரசியல் பேசுகிறேன் என்று சொல்லிக்கொண்டு தங்களுடைய இருப்புக்காவும்,அடையாளத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கின்ற சக மனிதர்களை திருநங்கைகளை திருநம்பிகளை அந்த வார்த்தையை சொல்வதற்கு கூட எனக்கு நாக்கு கூசுகிறது.அப்பேற்பட்ட ஒரு வார்த்தையை சொல்லி தங்களுடைய அரசியலை பேச பயன்படுத்தி இருக்கிறார்.
கஸ்தூரியை போன்றவர்கள் அறிவுஜீவிகள் என்று நான் நம்பிக்கொண்டு இருந்தேன்.ஆனால், அடிப்படையில் மனிதர்களின் உணர்வுகளையே புரிந்து கொள்ளாத இவர்கள் எல்லாம் அரசியல் விமர்சகர்களா? நாளைக்கு இவர்கள் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார்கள்.அதனால் நான் நாங்கள் அரசியலுக்கு வருவது முக்கியமாகிறது.ஊடகங்களில் எங்களுக்கான தளம் அமைப்பது முக்கியமாகிறது.
இவரை போன்றவர்கள் தரம் தாழ்ந்து பதிவுகள் போடுவது.அதை பார்த்து நிறைய பேர் சிரிக்கிறார்கள் வருந்துகிறார்கள்.ஆனால் எங்களுடைய எதிர்வினை எப்படி இருக்கும்.இதுபோன்ற டுவீட்களை பார்க்கும் போது எங்கள் குடும்பத்தினர்,நண்பர்கள்,உறவினர்களுக்கு வலிக்கும் தானே.
எல்லோரையும் வலிக்கவைத்தும் துன்பப்படுத்துகின்ற இதுபோன்ற கேவலமான அரசியல் உங்களுக்கு தேவையா? நீங்கள் யாரை பற்றியும் பேசுவதற்கு முன் அவர்களை பற்றி தெரிந்து பேசுங்கள்.நீங்கள் அரசியலையும்,கட்சியையும் அரசியல்வாதிகளையும் அசிங்கப்படுத்துவற்கு எங்களை ஏன் உதாரணப்படுத்துகிறீர்கள்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சினிமாக்காரர்கள் எங்களை சமூகத்தில் நிறைய வகைகளில் கேவலப்படுத்தி நிறைய பணமும் சம்பாதிதத்துள்ளீர்கள்.அந்த பணத்தில் திருநங்கைகளுக்கு எதுவும் செய்தது கிடையாது.தற்போது நாங்கள் போராடியதால் சினிமாவில் பல மாற்றங்கள் வந்துள்ளது.
சினிமாக்களில் திருநங்கைகளை நல்ல முறையில் காட்ட ஆரம்பித்துள்ளார்கள்.ஆனால்,சினிமா நடிகர்கள் மாறி இருக்கிறீர்களா?இல்லை ஏனெனில் இவர்கள் எல்லாம் இப்படி தான் என்று உங்கள் ரத்திலேயே அது கலந்து இருக்கிறது.ஏசி அறையில் இருந்துகொண்டு மற்ற மனிதர்களை பற்றி புரிந்து கொள்ளாமல் பப்ளிசிட்டி ஒன்றே தேவை என்பதற்காக இதை எல்லாம் பதிவிடுகிறீர்கள்.
திருநங்கைகள் குறித்தும் அவர்கள் வாழ்கை தரத்தை குறித்து பேசுவதற்கும் உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.எங்களுக்காக எதுவும் நீங்கள் செய்ததும் கிடையாது.எங்களை பற்றி நல்லதாக பேசியதும் கிடையாது.விழுப்புரத்தில் நீங்கள் திருநங்கைகள் குறித்து இனிக்க இனிக்க பேசியது இந்த ஒரு டுவீட்டின் மூலம் உங்கள் வேஷம் கலைந்துவிட்டது.
இனிமேலும் இதுபோன்ற கருத்து தெரிவித்தால் நான் இது போன்று பதில் சொல்லிக் கொண்டிருக்கமாட்டேன் எங்கள் திருநங்கை சமூகமே அதற்கு பதில் சொல்லும் அதற்கு தயாராக இருந்து கொள்ளுங்கள்.இது என்னுடைய மிரட்டல் அல்ல.கொதித்தவர்கள் என்ன செய்வார்கள் என்று நான் சொல்கிறேன்.உங்களுக்கு கொஞ்சம் கூட மனித தன்மையே இல்லையா? நீங்கள் எல்லாம் இந்த சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை.சினிமாக்காரர்களே நீங்கள் எங்கள் சமூகத்திற்கு எதுவும் செய்ய வேண்டாம் எங்களை வாழவிட்டால் அதுவே போதும். இல்லா என்றால் ரொம்ப கஷ்டம் எங்களுக்கு அல்ல உங்களுக்கு தான்”. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இதற்கிடையில் பலத்த எதிர்ப்பு காரணமாக, நடிகை கஸ்தூரி தனது பதிவை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.