June 12, 2018
தண்டோரா குழு
ஆந்திராவில் இறந்து போன மகளின் உடலை வீட்டிலேயே மூன்று நாட்கள் வைத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஜங்கரெட்டிகுடத்தை சேர்ந்தவர் அருணா ஜோதி (41).இவரது இல்லத்தில் இவரது தாய் மஞ்சுளா தேவி மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் அருணா ஜோதி கடந்த மூன்று நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.அருணா ஜோதியின் தாயும் அவரது சகோதரரும் அவரது உடலை அடக்கம் செய்யாமலும் உறவினர்களுடன் சொல்லாமலும் தனது வீட்டிலேயே வைத்திருந்தனர்.அருணாவின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அருணாவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வருகிறது என போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனையடுத்து,போலீசார் அருணாவின் வீட்டில் நுழைந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.இச்சம்பவம் குறித்து அருணாவின் தாயிடம் போலீசார் விசாரிக்கையில் என் மகள் மஞ்சுளா இறந்துவிட்டாலும் மீண்டும் கடவுளின் அருளால் உயிர்த்தெழுவார் என கூறியுள்ளார்.இதையடுத்து,போலீசார் கட்டாயப்படுத்தி அருணாவின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.