June 12, 2018
தண்டோரா குழு
சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தனர்.இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர்.
1950 – 53 காலகட்டத்தில் நிகழ்ந்த கொரிய போருக்குப் பின் எதிரிகளாக இருந்து வரும் வடகொரியா – அமெரிக்கா அதிபர்கள் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ பேச்சு நடத்தியது இல்லை. உலகின் சர்வாதிகார சக்தியாக விளங்கும் அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பல அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி, அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமான சமீபகாலத்தில் உருவெடுத்தவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். இவரது செயல்களால் அமெரிக்கா கடும் கோபத்திற்கு ஆளானதுடன், 3ஆம் உலகப்போர் ஏற்படுமோ என உலக நாடுகள் பதற்றம் அடைந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இருநாட்டின் தலைவர்களும் சந்திந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படி 60 ஆண்டுகளுக்கும் மேலான பகை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் வந்தனர்.
இருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்தனர். இருநாட்டு அதிபர்களும் சென்டோசா தீவை வந்தடைந்த நிலையில், அங்குள்ள கேபெல்லா ஓட்டலில், இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி சந்தித்தனர். பின்னர் பேச்சுவார்த்தை தொடங்கியது.
வடகொரியா உருவான பின் வடகொரியா, அமெரிக்க அதிபர்கள் சந்தித்துக்கொள்வது இதுவே முதன்முறை ஆகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு 41 நிமிடங்கள் நடந்தது.
இச்சந்திப்புக்கு பின் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,
வட கொரியா அதிபர் கிம் ஜாங்குடனான சந்திப்பு மிகவும் நன்றாக இருந்தது. அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியா , அமெரிக்கா இணைந்து செயல்படும். அணு ஆயுதம் மட்டுமின்றி, வட கொரியா மீதான பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனக் கூறியுள்ளார்.