June 11, 2018
தண்டோரா குழு
குறைந்த விலையான 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் விற்பனை செய்வதாக அறிவித்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனர் மோகித் கோயல் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் உலகின் குறைந்த விலை ஸ்மார்ட்போனை ரூ.251-க்கு அறிமுகம் செய்தது.இதையடுத்து, முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 30 ஆயிரம் பேர் ஆர்டர் செய்தனர். அவர்களிடமிருந்து தலா ரூ.251 பெற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் சிறிது நேரத்திலேயே அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது.
கிட்டத்தட்ட ஏழரை கோடி செல்போனுக்கு ஆர்டர் பெற்ற நிலையில், 70 ஆயிரம் செல்போன்களை மட்டுமே ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் வினியோகித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஃபிரிடம் 251 என்ற பெயரில் ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்தது பெரும் மோசடி திட்டம் என்று சர்ச்சை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ஏற்கனவே 16 லட்சம் ரூபாய் மோசடி புகாரில் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட மோகித் கோயலுக்கு மே 31 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்நிலையில், டெல்லி போலீசார் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பணம் பறித்தல் குற்றத்திற்காக மோகித் கோயல் உள்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.