June 9, 2018
தண்டோரா குழு
ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா சார்பில் கோவையில் குழந்தைகளுக்கான சாலைப் பாதுகாப்பு கோடைக்கால முகாமை ஆரம்பித்துள்ளது.
பள்ளிகளில் பயிலும் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு,கோவை போக்குவரத்து பயிற்சி பூங்காவில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்றுவிக்கப்படுகிறது.ஏற்கனவே,சாலை பாதுகாப்பு உரிமம் விண்ணப்பதாரர் பயிற்சித் திட்டம் ஜூலை 2017 மூலம் உரிமம் பெற விண்ணப்பித்திருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு 10 மாதங்களில் பயிற்சியளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில்,ஹோண்டா மோட்டர் சைக்கிள்&ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடெட்,கோவையில் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கான தேசிய சாலைப்பாதுகாப்பு கோடைக்கால முகாம் இந்தாண்டு ஆரம்பமாவது குறித்து அறிவித்திருக்கிறது.இந்த முகாமை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா மற்றும் ஹோண்டா மோட்டர் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடெட்டின் ப்ராண்ட் & கம்யூனிகேஷன் பிரிவின் துணைத்தலைவர் பிரபு நாகராஜ் ஆகியோரின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
தேசிய அளவில் 4 ஆயிரத்து 500 குழந்தைகளுடன்,ஹோண்டாவின் தேசிய சாலைப்பாதுகாப்பு கோடைக்கால முகாம் டெல்லி,லூதியான,ஹைதராபாத்,புவனேஸ்வர்,கட்டாக் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் நடத்தப்படவுள்ளது.இந்த முகாம் இன்று ஆரம்பித்து அடுத்த 7 நாட்களுக்கு நடக்கிறது.
சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பயிற்றுவிக்கப்படுவது இந்த முகாமின் சிறப்பம்சமாகும்.வாழ்வின் ஆரம்பக்கட்டத்திலேயே சாலைப்பாதுகாப்பு குறித்து கற்றுக்கொள்வது,சாலைகளில் பயணப்படும் போது பாதுகாப்பாக இருப்பது என்ற விழிப்புணர்வைப் பெற உதவுவதோடு,ஒவ்வொரு குடும்பத்திலும் பாதுகாப்பான நல்ல சாலை அனுபவத்தைப் பெற வழிவகுக்கும் என்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
சிறப்பு பயிற்சியளிக்கப்பட்ட பயிற்சியாளர்களின் மூலம்,குழந்தைகள் பள்ளி பேருந்தில், சைக்கிளிலில் பயணம் செய்யும்போது செய்யவேண்டியவை எவை? செய்யக்கூடாதவை எவை? என்பதைப் பயிற்றுவிக்கிறது.
மேலும்,சிறந்த சாலைப்பாதுகாப்பு வாசகம் [‘Best Road Safety Slogan’] போட்டியில்,குழந்தைகள் கலந்து கொள்வதன் மூலம்,சாலைப்பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்களை அவர்களது நினைவில் நிறுத்திக்கொள்ள பெரிதும் உதவும் வகையில் நடத்தப்படுகிறது.
9 வயது முதல் 12 வயது வரையிலான மாணவ மாணவியர்கள் மத்தியில் இருச்சக்கர வாகனங்கள் குறித்தும்,அவற்றில் பயணம் செய்யும்போது கியர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் பொழுதுபோக்கு அம்சத்துடன் கற்றுக்கொடுக்கப்படுகிறது.இதற்காக ப்ரத்யேகமாக இறக்குமதி செய்யப்பட்ட 50சிசி சிஆர்எஃப் 50 மோட்டர் சைக்கிள்களின் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.