June 4, 2018
தண்டோரா குழு
ரஜினி எதிரலையை சாதகமாகப் பயன்படுத்த பார்க்கிறார் என்று கமல்ஹாசன் மீது காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் குமாரசாமியும்,கமலும் இணைந்து பேசினர்.இந்த சந்திப்புக்கு பின்னர் காவிரியில் நல்ல தீர்வு ஏற்படும் என்ற நம்பக்கை ஏற்பட்டுள்ளதாக கமல் தெரிவித்தார்.இந்நிலையில்,ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டு கமல் சிதைக்க முயல்வதாக தமிழருவி மணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மக்கள் போராட்டத்திற்கு எதிரானவர் ரஜினிகாந்த் என்பதைப் போன்ற ஒரு பிம்பத்தினை கமல்ஹாசனின் அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது.மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும்,சில அமைப்புகளும்,அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க முற்படும் நேரத்தில்,கமல்ஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணலாம்.
ரஜினிகாந்த்,மக்கள் நலன் சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் எதிரி அல்ல.மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதாரப் போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெறக் கூடாது என்பது தான் ரஜினியின் கவலையாக இருக்கிறது.ரஜினி சொந்தக் கருத்தைச் சொல்லி இருப்பதாகவும்,மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில்,அவருடைய தனிப்பட்ட நோக்கம் தெளிவாகவே தெரிகிறது.சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல் அடையாளம்.
சமூக வலைதளங்களிலும்,சில காட்சி ஊடகங்களிலும் ரஜினிக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி,குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன்பிடிக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது” என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.