May 30, 2018
தண்டோரா குழு
உதகையில் ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்களை ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை என கூறி காவல் துறையினர் கலந்து செல்ல கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் சார்பாக இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நாடெங்கும் நடைபெற்று வருகிறது.இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பாக உதகையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த காவத்துறையினர் இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதற்கு வங்கி ஊழியர்கள் தாங்கள் பல வருடங்களாக இங்கு தான் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம் எனவே தங்களை ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் காவல் துறையினரோ முறையான அனுமதி இல்லாமல் இங்கு ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடத்த கூடாது என்றும் ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடத்த வேறு இடங்கள் ஒதுக்கி உள்ளோம் எனவே அங்கு சென்று ஆர்பாட்டம் நடத்தக் கூறினர்.இதனைத்தொடர்ந்து வங்கி ஊழியர்கள் அனைவரும் ஊர்வலமாக கோஷங்களை எழுப்பிய வண்ணம் வேறு இடத்திற்கு செல்ல முற்பட்டனர்.
ஆனால் மீண்டும் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தனித்தனியாகத்தான் செல்ல வேண்டும் என்றும்,எங்கும் கோஷங்களை எழுப்ப கூடாது மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என கூறினர்.இதனையடுத்து வங்கி ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவத்தால் ஸ்டேட் வங்கி முன்பு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.