May 29, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க, நடிகர் ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்கிறார்.
கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களின் போராட்டம், அரசியல் கட்சிகளின் கோரிக்கையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. மேலும் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களையும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறவும் நடிகர் ரஜினி தூத்துக்குடி செல்கிறார்.இதற்காக நாளை காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் தூத்துக்குடி செல்கிறார்.