May 29, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் உடனடியாக தூத்துக்குடி செல்ல முடிவு செய்துள்ளனர்.
கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களின் போராட்டம், அரசியல் கட்சிகளின் கோரிக்கையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. மேலும் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதற்கிடையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் 4 பேர் கொண்ட குழுவை தமிழகத்துக்கு அனுப்பவுள்ளது.
இந்த குழுவானது 2 வாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என்று கூறியுள்ளது. வழக்கறிஞர் ராஜராஜன் மனுவை அடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.