May 29, 2018
தண்டோரா குழு
கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி முறையாக மாணவர்களை தேர்வு செய்வதில்லை எனவும்,பள்ளியில் சேர்த்தாலும் உடனடியாக கட்டணத்தை கட்ட பள்ளிகள் வருபுருத்துவதாக கூறி கோவையில் பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.அதன்படி இந்த வருடத்திற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு,அதற்கான குலுக்கல் முறை கோவையில் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் பெற்றோர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பள்ளிகளில் குலுக்கல் முறை நடைபெற்றதாக தற்போது புகார் எழுந்து உள்ளது.தனியார் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளும் படிக்க மிகுந்த ஆர்வமாக இருந்து வந்த சூழலில் தற்போது முற்றிலும்,ஏமாற்றும் வேலையாக பள்ளிகள் நடந்து கொள்வதாகவும்,சில பள்ளிகளே மாணவர்களை தேர்வு செய்து சேர்க்கை நடத்தப்படுவதாகவும் பெற்றோர்களுக்கு எந்தவித அறிவிப்பும் தெரிவிக்கவில்லை என கூறுகின்றனர்.
இந்த ஆண்டு முதல் பள்ளியின் அருகே உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற தமிழக அரசின் அறிவிப்பால் பெரும்பாலான மாணவர்கள் சேர முடியாத நிலையில் இருப்பதால்,அந்த இட ஒதுக்கீடு முற்றிலும் காலியாகவே உள்ளதாக கூறுகின்றனர்.
தங்களுக்கு இடம் வழங்க வேண்டி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி அரசே அவர்களுக்கான கட்டணத்தை கட்டும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில்,இந்த இட ஒதுக்கீட்டில் மாணவர்களை பள்ளிகள் சேர்த்தாலும்,உடனடியாக பல்வேறு கட்டணங்களை கட்ட வற்புறுத்துவதாகவும் புகார் தெரிவித்தனர்.