May 28, 2018
தண்டோரா குழு
துப்பாக்கிச்சூடு நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 60க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடியில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு நேற்று வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்திப்பதற்காக துணை முதல்வர் பன்னீர் செல்வம் காரில் தூத்துக்குடி புறப்பட்டார். பின்னர் மருத்துவ மனையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தோருக்கு ஓ.பி.எஸ் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காயமடைத்தவர்கள் விரைவில் நலம் பெறுவார்கள், அவர்கள் கோரிக்கைளை அரசு விரைவில் நிறைவேற்றும். தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பி உள்ளது.இவ்வாறு கூறினார்.
இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்த இடங்களை ஓ.பி.எஸ் பார்வையிட்டார். ஓ.பி.எஸ் உடன் 3 அமைச்சர்களும் ஆய்வில் ஈடுபட்டனர்.