May 28, 2018
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி ராஜேந்திரசிங் என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த மேம்பால கட்டுமான பணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டுவந்தனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் 6.30 மணிக்கு பாலம் கட்டுமான பணிக்கு வேலைக்கு வந்த வடமாநில தொழிலாளியான ராஜேந்திர சிங் என்பவர் பாலத்தின் மேல் பகுதியில் பணிக்கு சென்று, அங்கிருந்த கம்பியில் துணி மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
மற்ற தொழிலாளர்கள் வேலைக்கு வந்த போது ராஜேந்திர சிங் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் உடனடியாக காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜேந்திர சிங் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் ராஜேந்திர சிங் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.