May 26, 2018
தண்டோரா குழு
வீட்டில் கழிவறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு மே மாத முதல் சம்பளம் வழங்கப்படாது என உத்தரபிரதேச மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) நாடு முழுவதும் கழிப்பறை கட்டும் நோக்கத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாகவும் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்படுவதே இவர்களது நோக்கம்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் சீதாபூர் மாவட்ட ஆட்சியர் அரசு ஊழியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருக்கும் கழிவறையை புகைப்படம் எடுத்து அத்துடன் கழிப்பறை கட்டியதற்கான அடையாள சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த உத்தரவின்படி சான்றை சமர்பிக்காத ஊழியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படும்.கழிப்பறை கட்டியதற்கான சான்றுகளை சமர்பித்த பின்னரே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.