May 26, 2018
தண்டோரா குழு
கோவையில் அமைத்துள்ள காவல் நிலையங்களில் “காவல் நிலையம் தோறும் நூலகம்” எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மேற்கூரையில், தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 50 KW திறன் கொண்ட சோலார்சக்தி மின்கலனை நேற்று நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.அதைப்போல் கோவையில் அமைத்துள்ள காவல் நிலையங்களில் “காவல் நிலையம் தோறும் நூலகம்” எனும் திட்டத்தை அவர் துவங்கி வைத்தார்.
அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி,
காவல்நிலையம் வரும் பொதுமக்களை புத்தகங்கள் படிக்க போலீசார் ஊக்கபடுத்த வேண்டும். காவல்துறை உங்கள் நண்பன் என்ற வார்த்தை பரவும் போது சமூக விரோதங்கள் குறையும். முதலமைச்சர் அனுமதியுடன் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்த முயல்வேன்.
மேற்கு மண்டல ஐ.ஜி பாரி பேசும்போது,
தமிழகத்திலேயே காவல் நிலையத்தில் நூலகம் என்ற பெருமை கோவைக்கு உண்டு.ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நூலகங்கள் அமைத்தால் காவல் நிலையங்களே தேவைப்படாமல் போய்விடும்.புத்தகங்கள் வரலாற்றின் அடையாளம்.பல்வேறு பிரச்சனைகளில் வருபவர்களும், குற்றவாளிகளும் புத்தகம் படிக்கும் போது அவரது வாழ்க்கையில் மாற்றம் கிடைக்கும் என்றார்.
பல்வேறு தேவைகளுக்காக காவல் நிலையத்தை அணுகின்ற மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவதுடன் அவர்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.கோவையில் இயங்கி வருகின்ற 36 ரோட்டரி சுழற்சங்கள் தங்கள் பகுதியில் அமைத்துள்ள 38 காவல் நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி பராமரிக்க உள்ளனர்.
இவ்விழாவில் விழாவில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், கோவை மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் முனைவர் மூர்த்தி, கவிஞர் கவிதாசன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.