May 22, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 100 நாட்களாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதால் பொதுமக்கள் கல்வீசி அவர்களை தாக்கினர். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள். பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்தும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த துப்பாக்கி சூட்டில் ஸ்டண்ட் சில்வா தங்கை கணவரும் இறந்துள்ளார்.
இது குறித்து ஸ்டண்ட் சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில்,
எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார் .மிக்க வேதனையோடு பகிர்கிறேன் எனக் கூறியுள்ளார்.
ஸ்டண்ட் சில்வா என்னை உள்ளிட்ட பல்வேறு படத்தில் நடித்துள்ளார். வீரம், ஜில்லா , தனி ஒருவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் சண்டை பயிற்சி கலைஞராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.