May 22, 2018 தண்டோரா குழு
ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது.இதையடுத்து, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.இதையடுத்து,போலீசார் தடியடி நடத்தியதால்பொதுமக்கள் கல்வீசி அவர்களை தாக்கினர். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள். பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தூத்துக்குடி கலவரத்தில் 11 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சூழலில், அனைத்து தரப்பு மக்களும் பொறுமை காத்து, மாநிலத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.