May 22, 2018
தண்டோரா குழு
நடந்த வன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்கள் இன்று கடையடைப்பு,கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்,பேரணி என அடுத்தடுத்து போராட்டங்களை மேற்கொண்டனர்.இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற ஆயிரக்கணக்கானோரை மடத்தூர் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து,போலீசார் தடியடி நடத்தியதால்பொதுமக்கள் கல்வீசி அவர்களை தாக்கினர்.போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து சூறையாடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.போராட்டகாரர்களை காவல்துறையால் தடுக்க முடியாததால்,ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள்.இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கண்ணாடி உடைந்து நொறுங்கியது.ஆட்சியர் அலுவலகம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.
பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில்,
மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது,கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என கூறி உள்ளார்.