May 22, 2018
தண்டோரா குழு
கோவை அடுத்த சோமனூரில் பெண் வழக்கறிஞர் வீட்டில் இளைஞர்கள் இருவர் திருட முயற்சிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியதை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோமனூர் ரயில்வே பாலத்தின் அருகில் வசித்து வரும் மில் உரிமையாளரான பழனிச்சாமி,அவரது மனைவி,வழக்கறிஞராக பணியாற்றி வரும் மகள் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.அப்போது,நள்ளிரவு, ஜன்னல் வழியாக வீட்டினுள் உள்ளவற்றை நோட்டமிட்டு,பின்பு கதவை உடைக்க முயற்சித்துள்ளனர்.அப்போது வெளியில் உறங்கிக்கொண்டு இருந்த பழனிசாமி கதவை உடைக்கும் சப்தம் கேட்டு எழுந்துள்ளார்.கதவை உடைக்க முடியாமல் சுவர்மேல் ஏறி பந்தலை பிரித்து அதன் வழியாக இறங்க முயற்சித்ததை கண்ட பழனிச்சாமி கூச்சலிட்டார்.இதனையடுத்து திருட வந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.இவை அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து கருமத்தப்பட்டி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, ரோந்து காவலர் வந்து விசாரனை நடத்தி சென்றுள்ளனர்.இதுவரை திருட்டு முயற்சி நடந்த வீட்டிலிருந்து யாரும் புகார் கொடுக்காததால் வழக்குப்பதிவு செய்யவில்லை. இருப்பினும்,புறநகர் பகுதியில் நடந்த சம்பவம் என்பதால் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.