May 21, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் நீபா வைரல் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை தலைமை செயலகத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
கேரளாவில் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் தாக்குதலுக்கு செவிலியர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், தமிழகத்திலும் இந்நோய் பரவும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை தலைமை செயலகத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை; வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க மருந்துகள் கையிருப்பில் உள்ளன. நிபா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது; காய்ச்சல் அறிகுறி குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனக் கூறினார்.
மேலும், நீலகிரி, கோவை உள்ளிட்ட கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் கூடுதல் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் வைரஸ் பாதிப்பை தடுக்கலாம். கேரள- தமிழக எல்லைப் பகுதிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளது என அவர் கூறினார்.