May 18, 2018
தண்டோரா குழு
நவீன தொழில்நுட்ப உதவியுடன் இயற்கையான சூழல் கொண்ட கட்டுமானம் அமைப்பது உள்ளிட்ட பல புதிய வகையான கட்டுமானம் தொடர்பாக அறிந்துக் கொள்ளும் வகையில் கோவையில் சர்வதேச அளவிலான கட்டுமான பொருட்கள் கண்காட்சி துவங்கியுள்ளது.
கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் கோவை சிவில் இன்ஞினியர்ஸ் அசோசியேசன் கொசினா சார்பில் 6வது முறையாக நடைபெறும் இந்த கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்துறை சார்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களின் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்,சந்தையில் வந்துள்ள பல புதிய கட்டுமானம் சார்ந்த பொருட்கள்,இயந்திரங்கள் மட்டுமின்றி கட்டிடத்தின் உள் மற்றும் வெளிப்புற அலங்கார வேலைப்பாடுகள், கார்டன் சம்மந்தப்பட்ட மாதிரிகளும் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும்,மரங்கள் வெட்டப்பட்டு கட்டிடங்களாக உருவாக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாக வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுமானங்களில் இயற்கையான சூழலை கொண்டு வருவது, குடியிருப்புகள்,வணிக வளாகம் என எந்த வகையான கட்டிடங்களிலிருந்து வெளியேறும் கழிவுகளை இயற்கை முறையில் சுத்திகரிக்கும் முறை கொண்ட கட்டுமானங்கள் என பசுமையை ஊக்குவிக்கும் வகையிலான கட்டுமானங்கள் அமைப்பது தொடர்பான வழிமுறைகள்,வழிகாட்டுதல்கள்,ஆலோசனைகள் கண்காட்சியில் வழங்கப்படுகின்றன.
மேலும், கண்காட்சி வளாகத்தில் கட்டுமானத்திற்கான தண்ணீர் இலவசமாக பரிசோதனை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பரிசோதனைக்கு தேவையான தண்ணீர் கட்டுமான மனையிலிருந்து 3 மணி நேரத்திற்குள் தண்ணீர் பிடித்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை பொறியாளர்கள்,கட்டுமானத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள்,மாணவர்கள் என சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.