May 18, 2018
தண்டோரா குழு
கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கார் கண்ணாடிகளை அதிமுகவினர் உடைத்ததாக அமமுக உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை வடவள்ளியில் முன்னாள் எம்.எல்.ஏ.வும்,அமமுக தெற்கு மாநகர மாவட்ட செயலாளருமான சேலஞ்சர் துரை தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் கூட்டம் முடிந்து முன்னாள் எம்.எல்.ஏ.சேலஞ்சர் துரை உட்பட அமமுக பிரமுகர் ஓணாப்பாளையம் சாலையில் அருகே வந்துக்கொண்டிருந்த போது,அமைச்சரின் ஆதரவாளரான அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திரசேகர் மற்றும் அன்பு ஆகியோர் ஆதரவாளர்களுடன் வந்து பிரச்னையில் ஈடுபட்டதாகவும்,அப்போது சுமார் 6 கார் கண்ணாடிகள் கல்லால் உடைக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும்,கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுடன்,அமமுக நிர்வாகிகளில் தாக்கப்பட்டதாகவும் கூறி அமமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஏற்கனவே,இந்த கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபம் அதிமுகவை சேர்ந்த மாவட்ட அமைச்சரின் உத்தரவுப்படி அப்பகுதி அதிமுக உறுப்பினர் தலையீட்டால் கடைசி நேரத்தில் வழங்கப்படாத நிலையில்,அதிமுகவினர் இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது என்றும்,அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்து மறியலின் போது முழக்கங்கள் எழுப்பினர்.
சாலை மறியலில் ஈடுபட்ட அமமுகவினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.இச்சம்பவம் குறித்து வடவள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.