May 16, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடிபோதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்து 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ABT என்ற தனியார் பேருந்து பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது. பேருந்தை ஓட்டுனர் விஜய் ஓட்டி வந்தார். அவர் பேருந்து புறப்பட்டது முதலே தாறுமாறாக பேருந்தை ஓட்டியுள்ளார். இதனைக் கண்ட பயணிகள் விஜயை எச்சரித்துள்ளனர். ஆனாலும் பேருந்தை விஜய் அஜாக்கிரதையாக ஒட்டிவந்துள்ளார். அப்போது,பேருந்து பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ராஜேஸ்வரி திடல் அருகே வந்தபோது சாலையோரம் நடந்து சென்ற தனபாக்கியம் என்பவர் மீது மோதியது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஓட்டுனர் விஜயை பிடித்து தர்ம அடி கொடுத்தியுள்ளனர். இதையடுத்து,தகவலறிந்து அங்கு வந்த போலீசார் ஓட்டுநர் விஜயை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது.
மேலும் விபத்தில் காயம் அடைந்த தனபாக்கியம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.