May 9, 2018
தண்டோரா குழு
கடந்த வாரம் ரிலீஸான அடல்ட் காமெடிப் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில்,கெளதம் கார்த்திக்,வைபவி ஷாண்டில்யா,சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில், ஆபாச வசனங்கள் நேரடியாகவே இடம்பெற்றுள்ளன. இது சமூகத்தை சீரழிக்கும் என பலரும் படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் படம் என்பது போன்ற விமர்சனங்கள் இந்தப் படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளன.இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்துக்கு எதிராகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.இந்நிலையில் திருநங்கைகள் இப்படத்தில் தங்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் கூறி சென்னை தோஸ்த் என்ற அமைப்பைச் சேர்ந்த அப்சரா மற்றும் சாரா ஆகிய திருநங்கைகள் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள புகாரில்,
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் டைட்டிலே உள்ளர்த்தம் கொண்டதாக ஆபாசமாக இருக்கிறது.இப்படத்தில் திருநங்கைகளைப் பற்றி ஆபாசமாக சித்தரித்தும்,இழிவுபடுத்தியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.மேலும், ஆபாசப் படமான இதை தடை செய்ய வேண்டும்.படத்தின் தயாரிப்பாளர்,இயக்குநர்,நடிகர்கள் அனைவரும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என புகார் அளித்துள்ளனர்.மேலும்,இது தொடர்பாக அவர்கள் நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் தெரிவித்துள்ளனர்.