May 8, 2018
தண்டோரா குழு
கோவையில் காயம்பட்டு மயங்கி விழுந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமமான நரசிபுரம் அருகே உடல் நலக்குறைவால் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது.கடந்த 10 நாட்களாக வனத்துறையினர் அதனை கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த ஞாயிறன்று இரவு உடல் நலம் குன்றி கீழே விழுந்தது.இதனையடுத்து வன மருத்துவக்குழுவினர் காட்டு யானைக்கு சிகிச்சை அளித்தனர்.மேலும்,ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு,உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.
பின்னர் நேற்று காலை உடல் சோர்வு சற்று நீங்கியது.இதனை தொடர்ந்து கிரேன் உதவியுடன் காட்டு யானை தூக்கி நிறுத்தப்பட்டது.வாயில் காயத்திற்க்கும்,உடலில் உள்ள புழுக்களை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட்டதாக வனத்துறை மருத்துவர் மனோகரன் தெரிவித்தார்.
பின்னர் 24 மணி நேர சிகிச்சைக்கு பின் யானை மாலையில் உடல் பலம் பெற்ற பின் கிரேனில் இருந்த கயிறு அவிழ்க்கப்பட்டதையடுத்து யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது.இந்நிலையில் வனப்பகுதிக்குள் சென்ற அந்த யானை சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தது.