May 8, 2018
தண்டோரா குழு
காவிரி நதிநீர் பங்கீடு வரைவு திட்டத்தை மே 14ந் தேதி தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் துவங்கியது.அப்போது வாதாடிய மத்திய அரசு காவிரி வரைவு திட்டம் இறுதி வடிவத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வாதிட்டது.எனவே,மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து,காவிரி வரைவு திட்ட அறிக்கையை 14-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மேலும் காலவ அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,மே 14ந் தேதி நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி காவிரி நதிநீர் பங்கீடு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மே 12ம் தேதி கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மே 14ந் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாததால் தமிழக விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.