May 8, 2018
முகமது ஆஷிக்
கடந்த வாரம் ரிலீஸான அடல்ட் காமெடிப் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில்,கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா,சந்திரிகா ரவி,யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில்,ஆபாச வசனங்கள் நேரடியாகவே இடம் பெற்றுள்ளன.இது சமூகத்தை சீரழிக்கும் என பலரும் படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் படம் என்பது போன்ற விமர்சனங்கள் இந்தப் படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளன.இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்துக்கு எதிராகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இப்படம் குறித்து நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது,
“சமூகத்தில் எல்லோருக்கும் ஒரு பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும்.நாம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று என்ன வேண்டுமாலும் செய்யலாம் என்று நினைக்கக்கூடாது.ஏ பிலிம் அடல்ட் காமெடி படங்கள் என எல்லா ஜோனரில் படங்கள் எடுக்கலாம்.ஆனால் அதற்கும் ஒரு நெறிமுறை உள்ளது.அப்படி எடுத்தாலும் அநாகரீகமாக இருக்கக் கூடாது.பெண்களை அவமதிப்பதும், தரைகுறைவாக பேசுவதும் தான் அடல்ட் காமெடியா? தற்போது எதை சென்சார் பண்ணவேண்டும் எதை சென்சார் பண்ணக்கூடாது என்பது அங்கு இருப்பவர்களை பொறுத்து தான் இருக்கிறது.
இனி இது போன்ற படங்கள் அதிகமாக வரத்துவங்கும்.முன்பு பாக்யராஜ் படங்களில் இது போன்ற காட்சிகள் இருக்கும்.அது ரசிக்கும் படி இருக்கும்.ஆனால் இது போன்று நேரடியாக கீழ்த்தரமாக இருக்காது.காம உணர்வு என்பது எல்லா உயிரினங்களுக்கு உள்ள பொதுவான விஷயம் தான். மிருகங்களுக்கு வக்கிரம் இல்லை ஆனால் மனிதனுக்கு உண்டு.அந்த வக்கிரத்தை தூண்டும் விதமாக தான் இது போன்ற படங்கள் இருக்கிறது.என்டர்டையிமென்டிற்காக எதுவேண்டுமாலும் செய்வார்களா? அடல்ட் காமெடி படங்களை எடுக்கக்கூடாது என்று சொல்ல முடியாது.அதற்காக தான் சென்சார் போர்டு A என்ற ஒரு கேட்டகிரி வைத்துள்ளது.
இணையத்தளத்தில் இதுபோன்று வருவது வேறு ஆனால் வெளிப்படையாக தியேட்டரில் பெண்களை அவமதிப்பது போன்ற வசனங்களும் அநாகரீகமாவும் படங்கள் எடுப்பது இளைஞர்களை கெடுப்பது போல் உள்ளது.எப்படி இருந்தது தமிழ்நாடு தற்போது எப்படி மாறிவிட்டது.உலகம் முழுவதும் பெருமையாக பேசபட்டது கலாச்சாரம் தமிழரின் காலச்சாரம்.அம்மா என்று அழைத்த தமிழரின் பண்பாடு இன்று எப்படி ஆகிவிட்டது. எதை கொண்டாட வேண்டும் எதைக்கொண்டாடக் கூடாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.கலாச்சாரம் என்று பேசினால் மட்டும் போதாது முதலில் அதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
சினிமா பொழுதுபோக்கு தான் ஆனால் அதிலும் பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும்.தனி மனிதனின் பயனுக்காக மொத்த பெண் வர்கத்தை அவமதிப்பது போன்று செய்யக்கூடாது.நாளைய தலைமுறைக்கு என்ன உதாரணம் கொடுக்க போகிறோம் என்றே புரியவில்லை.யார் என்ன வேண்டுமாலும் பேசலாம் என்ன வேண்டுமாலும் செய்யலாம் என்பது போல் ஆகிவிட்டது.பாட்டி வயதில் இருப்பவர்களையும் தப்பாக பேசலாம், பிறந்த குழந்தையையும் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்ற நிலையை வளர்த்து விட்டார்கள். இப்படி இருக்கும் சமூகத்தில் பெண்கள் வாழ்வது.ஒரு தாய் தன் பிள்ளைக்கு பால் ஊட்டுவதை கூட தப்பாக பார்க்கும் அளவிற்கு தற்போது நிலைமை மோசமாகிவிட்டது” என்றார்.