May 8, 2018
தண்டோரா குழு
கோவை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி இன்றும் நாளை மறுதினமும் நடைபெறுகிறது.
இந்த ஆய்வு பணியை கோவை மாவட்ட ஆட்சி தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டு இன்று(மே 8)துவக்கி வைத்தார்.இந்த ஆய்வுப் பணியில் இன்று மட்டும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 488 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு வந்து உள்ளன.
இந்த வாகனங்களில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரி குழந்தைகள் ஏறி செல்லும் படிகளின் அளவு ஜன்னல்கலின் அளவு எதிரொலிக்கும் ஸ்டிக்கர்கள் நம்பர் பிளேட்டுகள் முதலுதவி பெட்டிகள் தீயணைப்பு கருவிகள் அவசர கால வழி என 19 வகையான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.மேலும், பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாகனம் இயக்குவது மற்றும் பராமரிப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“தற்போது இந்த ஆய்வானது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் வருவாய் துறை,கல்வி துறை,போக்குவரத்து துறை உள்ளிட்டவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி இந்த ஆண்டும் ஆய்வு பணி முதல் கட்டமாக நடைபெறுகிறது. இதில் பள்ளி வாகனங்களில் அவசரகால வழி படிக்கட்டுகளின் அளவுகள் போன்ற 19 வகையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்த சோதனைகள் நிறைவுற்றால் தான் வாகன ஓட்டுனர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்றார்”.