• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பாரதிராஜா கண்டனம்

May 7, 2018 தண்டோரா குழு

கவுதம் கார்த்தி நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கவுதம் கார்த்தி நடிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ‘ஏ’ சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தில், நேரடி ஆபாச வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இளைஞர்கள் மத்தியில்இப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஆபாசத்துக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்திற்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள் கொண்டுவர முடியும் என்று சொன்னார்கள். சமீபகாலமாக, சில தரம்கெட்ட திரைப்படங்களால் நம் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. இலக்கியம், இதிகாசம், சராசரி மனித வாழ்க்கையைக் கொண்டாடிய நம் திரைப்படங்கள், இன்று சதையை மட்டுமே கொண்டாடுகின்றன. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள், இன்று இரட்டை அர்த்த வசனங்களால் மலிந்துபோய்க் கிடக்கின்றன. கொண்டாடிய வேண்டிய திரைப்படங்கள், இன்று கொள்கையற்றுக் கிடக்கின்றன. இலைமறை காயாக சொல்லப்பட்ட விஷயங்களை, இன்று இலைபோட்டுப் பரிமாறுகிறார்கள். தாழ்ந்த உருவாக்கங்களால் தலைகுனிகிறது நம் திரைப்படத்துறை.

தமிழ் மக்களே… ரசனை மாற்றமென்று தரம்கெட்டுப் படைக்கும் படைப்புகளைப் பார்ப்பதைப் புறக்கணியுங்கள். சமீபத்தில் வெளியான முடை நாற்றமடிக்கும் ஒரு திரைப்படம், நம் தமிழ்நாட்டு இளைஞர்களைத் திசைதிருப்பி, நம்முடைய ரசனையை மழுங்கடித்து, தற்போதைய தமிழகத்தின் பிரச்சினைகளை மறக்கச் செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இவர்களுக்குத் துணை போவதால் தான், ஆபாசமான திரைப்படங்களுக்கும் தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கிறது. காரணம், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு தெரியாதவர்கள் பதவியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும். ஏன்… இதற்கு மேலேயும் நடக்கும். இதற்கு ஒரு முடிவுகட்ட நாள் குறிக்க வேண்டும்.

இது ஒருபக்கம் இருக்கட்டும்… மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சென்சார் போர்டு என்ன செய்து கொண்டிருக்கிறது? சரியான விஷயங்களுக்குக் கூட கத்திரி போட்ட நீங்கள், சமீப காலமாக ஆபாசப் படங்களுக்கு அனுமதி அளிப்பது ஏன்? எவ்வளவோ காலங்களாய் அடங்கிக் கிடந்த தமிழ் இனம், தற்போது பிரச்சினைகளைக் கண்டு வீறுகொண்டு நிமிர்ந்து நிற்க முயற்சி செய்யும்போது, எங்களை பலவீனப்படுத்த நீங்கள் செய்யும் சூழ்ச்சியோ என்றுகூட சந்தேகப்படுகிறேன்.
ஆபாசத் திரைப்படங்களைப் படைக்கும் படைப்பாளர்களே… நீங்கள் எடுக்கும் திரைப்படங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? சற்று சிந்திப்பீர். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்கு திரை ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்.
திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது எழுதப்பட்ட வாழ்க்கை என்பதை உணருங்கள். மத்திய தணிக்கைக்குழு அதிகாரிகளே… இரண்டாம் தரமான படைப்புகளை மறு பரிசீலனை செய்யுங்கள். இல்லையென்றால், சென்சாரையே சென்சார் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க