May 7, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் பாக்கு விற்பனை மையம் அமைக்காததால் வெளிமாநிலங்களுக்கு தமிழக விவசாயிகள் செல்ல வேண்டி உள்ளதால் உடனடியாக விற்பனை மையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி,பாக்கு மட்டையுடன் வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழகத்தில் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 5 முதல் 7 டன் பாக்கு விளைச்சல் செய்து வருகின்றனர்.பாக்கிற்கு கிலோவிற்கு 35 ரூபாய் வரை விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பாக்கு விற்பனை மையம் இல்லாததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரிலும்,கேரளா மாநிலத்திற்கும் சென்று விற்கும் சூழ்நிலை உள்ளது.இதனால் சாதாரண விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும்,எனவே தமிழகத்தில் பாக்கு விற்பனை மையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பாக்கு மட்டையுடன் வந்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.பாக்கு மட்டையில் இருந்து கிடைக்க கூடிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும்,கோவையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் அதன் காரணமாக தென்னை, வாழை மரங்கள் மழையால் சேதமடைந்ததால் ஆய்வு செய்து இழப்பீடு வழங்கவும் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.