May 3, 2018
தண்டோரா குழு
விருதுகளை வாங்க மறுத்த திரைக்கலைஞர்களுக்கான இருக்கைகள் நீக்கி தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கினார்.
2017ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.இதில், சிறந்த தமிழ் படத்துக்கான விருது ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூலெட் திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டது.இதையடுத்து,65வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,விருது வழங்கும் விழாவில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.ஏனெனில்,வழக்கமாக தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் தான் வழங்குவார்.ஆனால் இன்று நடைபெறும் விழாவில் குறிப்பிட்ட 11 பேருக்கு மட்டும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்குவார் என்றும் தெரிவிக்கபட்டது.
இந்த தகவலையடுத்து விருது பெறுபவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.விருது வழங்கும் விழாவை புறக்கணிக்கப்போவதாக தமிழ்த்திரைப்பட இயக்குநர் செழியன்,நடிகர் பகத் ஃபாசில் உள்ளிட்ட 68 பேர், திரைப்பட விழாக்களுக்கான கூடுதல் இயக்குநர் சைதன்ய பிரசாத்துக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் தேசியத் திரைப்பட விருதை குடியரசுத் தலைவர் கையால் பெறுவது என்பது ஒரு கலைஞன் வாழ்நாள் முழுவதும் நினைத்து பெருமைப்படக் கூடிய விஷயம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இம்முறை 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் விருது தருவார் என்றும்,மற்ற 120 பேருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதைத் தருவார் என அறிவித்திருப்பதும் தங்களுக்கு ஏமாற்றத்தை தருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்,குடியரசுத் தலைவர் தனது கையால் விருதுகளை வழங்குவது 65 ஆண்டுகால மரபு என்றும், தற்போது அது மீறப்படுவதாக தங்களுக்கு தோன்றுவதாகவும் கூறியுள்ளனர்.எனவே இவ்விழாவை புறக்கணிக்கும் முடிவுக்கு தாங்கள் வராவிட்டாலும்,பங்கேற்காமல் இருந்து வேதனையை வெளிப்படுத்த போகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.