May 3, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் நீட் தேர்வு மையம் கூடுதலாக ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் காளிமுத்து மைலவன் என்பவர் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இதனை பொது அறிவிப்பாக கருதி தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் தொடர்பான விபரத்தை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் ஒதுக்கிய நீட் தேர்வு மையத்தை தமிழகத்திலேயே ஒதுக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,தமிழக மாணவர்களுக்கு கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு பதில் தமிழத்திலேயே மையம் ஒதுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும், வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வெழுத தமிழக மாணவர்களுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.