May 2, 2018
தண்டோரா குழு
கோவை கண்ணம்பாளையம் குட்கா ஆலை விவகாரம் தொடர்பாக தலைமறைவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட மூன்று பேர் முன் ஜாமின் கோரி கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை கண்ணம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் கடந்த 27 ஆம் தேதி கோவை மாவட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு,மிரட்டல் விடுத்ததாக எம்.எல்.ஏ உட்பட பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் சட்டமன்ற உறுப்பினர் உட்பட மூன்று பேர் தலைமறைவாகினர்.இந்நிலையில் தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ காத்திக் உட்பட மூன்று பேரும் முன் ஜாமின் கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.