April 27, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் மத்திய அரசு தாமதம் செய்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கூறியுள்ளார்.
காவிரி நடுவர் மன்ற வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 6 வார காலத்துக்குள் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க உத்தரவிட்டது.எனினும்,காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.ஆனால் 6 வார காலம் முடிவடைந்த பின் உத்தரவில் குறிப்பிட்டிருப்பது ஸ்கீமா? மேலாண்மை வாரியமா? என உச்சநீதிமன்றத்தில் மன்றத்தில் மத்திய அரசு விளக்கம் கேட்டு மனுத்தாக்கல் செய்தது.அதைப்போல் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,மே 3-ந் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீட்டு திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில்,தற்போது இது தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறது மத்திய அரசு.
மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, நதிநீர் பங்கீட்டு வரைவு அறிக்கை இன்னமும் தயாராகவில்லை.அதனால் கால அவகாசம் கேட்கிறோம் என தலைமை நீதிபதியிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு.“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என கூறியுள்ளார்.