April 25, 2018
தண்டோரா குழு
எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் கோரிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஏப்.28 ஆம் தேதிக்குள் விளக்கம் தர உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும்,பாஜக உறுப்பினருமான எஸ்.வி சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பத்திரிக்கையாளர் அவமதிக்கும் வகையில் தகாத கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இதுத்தொடர்பாக அனைத்து தரப்பிலும் இருந்து கண்டன குரல் எழுந்த உடனே தன்னுடைய முக நூல் பதிவு மற்றொருவருடையது என்றும்,தான் அதனை படிக்காமல் பகிர்ந்து விட்டேன் என்றும் அவர் விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில்,பத்திரிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி. சேகர் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.இதனையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஏப்.28 ஆம் தேதிக்குள் விளக்கம் தர உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.மேலும் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகருக்கு இதுவரை முன் ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.