April 24, 2018
தண்டோரா குழு
நியூட்ரினோ மீத்தேன் திட்டத்திற்கு எதிராக நான் கலை வடிவில் போராட்டத்தை கொண்டு வர நினைக்கிறேன் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்குரி படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கோவையில் உள்ள தனியார் திரையரங்கில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“வசனமே இல்லாத மெர்குரி படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.கார்ப்பரேட் க்ரைம்களினால் ஏற்படும் பாதிப்பை பேசுவதால் வெகுஜன மக்களை நிச்சயம் இந்தப் படம் கவரும். உலகத்தையே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆக்கிரமித்து இருக்கின்றன.அதிலிருந்து தப்பிப்பதற்கு வழி தெரியவில்லை.கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சமூக அக்கறை இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ரஜினி படத்திற்கான கதை விவாதம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தற்பொழுது அதைப்பற்றி கூற முடியாது.மக்கள் நியூட்ரினோவுக்கு எதிராகவும்,மீத்தேனுக்கு எதிராகவும் சாலையில் இறங்கி போராடுகிறார்கள் நான் கலை வடிவில் போராட்டத்தை கொண்டு வர நினைக்கிறேன்.மெர்குரி படமும் ஒரு போராட்ட வடிவம் தான்.சமூகம் சார்ந்த பொறுப்புணர்வுடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்பதையும்,எனக்கு அவர்களிடம் கேட்க வேண்டும் என்ற கேள்வியாகவே ‘மெர்குரி’ படம் எடுத்துள்ளேன்.
தயாரிப்பாளர் சங்க பிரச்சனையின் போது பிறமொழி படங்களெல்லாம் இங்கே திரையிடுகிறார்கள் அதேபோல,மொழியில்லாத மெர்குரியையும் வெளியிட வேண்டுகோள் விடுத்தோம்.ஆனால் சில காரணங்களை சொல்லி மறுத்துவிட்டார்கள்.அந்த காரணங்கள் நியாயமானதாக இருந்ததால் அதற்கு நாங்களும் உடன்பட்டோம்.இருப்பினும் மற்ற மாநிலங்களில் படம் வெளியான போது நம் மக்களுக்கு படத்தைக் காட்ட முடியாதது வருத்தமாக இருந்தது என்றும் பிரச்னைகளெல்லாம் முடிந்து முதல் திரைப்படமாக வந்திருக்கும் மெர்குரியை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதால் மெர்குரி திரைப்படமும் ஒரு போராட்ட வடிவம் தான்”.இவ்வாறு அவர் பேசினார்.