April 16, 2018
தண்டோரா குழு
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ள கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக அரசியல் கட்சியினர், மாணவர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதற்கிடையில், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து திமுக தலைமையில் இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ்,
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜ., செயல்படாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.,வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இது தொடர்பாக கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம் என கூறியுள்ளார்.
இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும் காலம் தாழ்த்தி வரும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளிப்பாக உள்ள நிலையில், தற்போது பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கர்நாடகாவுக்கு ஆதரவாக கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, முரளிதரராவின் பேச்சுக்கு பதிலளித்துள்ள விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்,
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பாஜ., செயல்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுகூடி போராடும். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பாஜ., தேர்தல் அறிக்கை வெளியிட்டால் தேர்தல் கமிஷனில் புகார் அளிப்போம் என தெரிவித்துள்ளார்.