April 10, 2018
தண்டோரா குழு
சென்னை அண்ணாசாலையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய இயக்குநர் வெற்றிமாறன் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இதற்கிடையில், ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணா சாலை அருகே மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்துவோம் என்று பாரதிராஜா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து,ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மறியல் போராட்டம் என அணி அணியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அண்ணா சாலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் பாரதிராஜா, வெற்றி மாறன், கவுதமன், வைரமுத்து உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் வாலாஜா சாலைக்குள் சென்று சிலர் கற்களை வீசினர். இதனால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் வெற்றி மாறன், களஞ்சியம் உள்ளிட்டோர் மீது போலீஸார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.