April 9, 2018
தண்டோரா குழு
40 ஆண்டுகளாக நடிக்கிறேன், ஐடி ரெய்டு கண்டு அஞ்சப்போவதில்லை என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ் ,நாம் என்றுமே தமிழர்களின் பக்கம்; தமிழ் உணர்வுகளின் பக்கம், எந்த அரசாக இருந்தாலும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம் எனக் கூறியிருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஐடி ரெய்டு வந்தால் எப்படி பயப்படுவார் என தெரியும் என்று கூறினார்.
இந்நிலையில்,சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் சத்யராஜ்,
காவிரி பிரச்னை உள்ள சூழலில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம்; போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி வேண்டாம் என்றார். மேலும், தமிழிசை என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் அரசியல் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை.40 ஆண்டுகளாக நடிக்கிறேன், ஐடி ரெய்டு கண்டு அஞ்சப்போவதில்லை என, தமிழிசையின் கேள்விக்கு அவர் பதில் கூறியுள்ளார்.