April 5, 2018
தண்டோரா குழு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை நியமனம் செய்து கவர்னர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் 2016 மே 26ம் தேதி முதல் துணை வேந்தர் இல்லாமல் இயங்கி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரின் பணிகளை மேற்கொள்ள உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டு, பல்கலை நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே துணை வேந்தர் தேர்வு குழு கலைக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது. ஆனால், நீதிபதி லோதா பதவி விலகியதையடுத்து அந்த குழுவும் கலைக்கப்பட்டது. இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு துணை வேந்தர் நியமிக்கப்படாமலேயே குழு கலைக்கப்பட்டு, 3வது தேர்வுக்கு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக அவர் பதவியில் இருப்பார். சூரப்பா, இந்திய அறிவியல் மையத்தில் பேராசிரியராக 24 ஆண்டுகளும், ஐ.ஐ.டி., இயக்குனராக 6 ஆண்டுகளும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.